சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் பாடம்..!
சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கல்வி அளிக்க சிபிஎஸ்இ (CBSE) அறிவுறுத்தியுள்ளது. www.cbse.gov.in
நம் நாடு முழுதும் சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் பயிற்று மொழியாக உள்ளன. தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்ற கொள்கையின்படி, கடந்த கல்வியாண்டில் (2022-2023 முதல்) தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், அடுத்த கல்வியாண்டு 2024-2025 முதல் அனைத்து சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளிலும் ஆங்கிலம், இந்திக்கு அடுத்து தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ இயக்குநர் ஜோசப் இமானுவேல் அவர்க்ள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை உயர்கல்வித் துறை செயல்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில் பன்மொழிக் கற்பித்தலுக்கு பள்ளிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில், மழலையர் பயிலும் முன்பருவக்கல்வி கற்பிக்கும் பள்ளி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இந்திய மொழிகளை பயிற்று மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் உட்பட 22 மொழிகளில் பாடப்புத்தகங்களை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், அடுத்த கல்வியாண்டு (2024-2025) முதல் மாணவர்களுக்கு அவரவர்கள் தாய் மொழியில் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ இயக்குநர் ஜோசப் இமானுவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.