தமிழக பட்டதாரி மாணவர்களுக்கான கல்வியியல் செய்தி :
பட்டதாரிகள் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பிற்கு (பி.எட்., - B.Ed., ) செப்டம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் (தமிழ்நாடு) தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்., - B.Ed.,) 2023- 2024 ஆம் கல்வியாண்டில் சேர்ந்து பயில பட்டதாரி மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதள வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான, இணையதள விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 1 முதல் (01.09.2023) அன்று துவங்கியது. இணையதளம் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் வரும் திங்கள் செப்டம்பர் 11 (11.09.2023) ஆகும்.
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். பட்டியல்/ பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ரூ. 250-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். தேவையான கட்டணங்களை, கடன் அட்டை /சேமிப்பு கணக்கு அட்டை / இணையதள வங்கிச் சேவை/ யுபிஐ (UPI) பேடிஎம் (PAYTM) மூலமாக செலுத்தலாம்.
அவ்வாறு செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் the director, directorate of collegiate education, Chennai-15 என்ற பெயரில் செப்டம்பர் 1ம் தேதி அன்று அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக கட்டணத்தை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுளது.
விண்ணப்பதாரர்களும் அவர்களது பெற்றோர்களும் www.tngasa.in என்ற இணையதளத்திற்கு வருகை தந்து சமீபத்திய தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தெளிவான விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், பின்வரும் தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் 93634 62070, 93634 62007, 93634 62042 மற்றும் 93634 62024 மின்னஞ்சல் தொடர்புக்கு tngasa2023@gmail.com ஆகும்.

