இஸ்ரோவில் விஞ்ஞானி ஆக வேண்டுமா...? என்ன படிக்கலாம்...? எங்கு படிக்கலாம்...? இதோ முழு விவரம் உங்களுக்காக ...
விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கு இருந்தாலும், அதற்கு என்ன செய்ய வேண்டும்?, என்ன படிக்க வேண்டும்? என்று தெரியாமல் நம்மில் பலரும் குழப்பத்தில் இருக்கிறோம்.
வழக்கமாக மருத்துவர், பொறியாளர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் போன்ற படிப்புகள் மட்டும் தான் உயர்படிப்புகள் என்றும், மதிப்புமிக்க படிப்புகள் என்றும் இன்று பலராலும் பார்க்கப்படுகின்றன. இவைகளையும் தாண்டி ஆர்வமும், சவால்களும் நிறைந்த பல படிப்புகள் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்று தான் விண்வெளி ஆராய்ச்சி பொறியாளர் அல்லது விஞ்ஞானிக்கான படிப்பு.
விஞ்ஞானி ஆக வேண்டும் என ஆசை இருந்தாலும், அதற்கு என்ன செய்ய வேண்டும்?, என்ன படிக்க வேண்டும்? என்று தெரியாமல் நம்மில் பலரும் குழப்பத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் எண்ணற்ற பாடப்பிரிவுகள் உண்டு. அதில் எந்த துறையை தேர்ந்தெடுத்தால், நாம் நினைத்ததை அடைய முடியும் என்ற தெளிவு இருக்க வேண்டும்.அந்த வகையில், இஸ்ரோவில் விஞ்ஞானி (ஆராய்ச்சி பொறியாளராக) ஆக சேருவதற்கு எந்த துறையில் சேரலாம்?, எங்கு படிக்க வேண்டும்? என்பதை இப்போது பார்க்கலாம்.
ISRO - பற்றிய தகவல் :
Indian Space Research Organisation எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சுருக்கமே இஸ்ரோ (ISRO) எனப்படுகிறது. இந்தக்ஷ்நிறுவனம் 1969 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நம் இஸ்ரோவின் தந்தை டாக்டர். விக்ரம் சாராபாய் ஆவார். விண்வெளி துறையில் அமெரிக்க, ரஷ்ய மற்றும் இங்கிலாந்து நாடுகள் பெரும் பொருள் செலவு செய்து ஆய்வுகள் பல மேற்கொண்டிருந்த காலக்கட்டத்தில், உலக நாடுகளுக்குப் போட்டியாக இந்தியாவின் இஸ்ரோ உருவெடுத்தது. இது மட்டுமல்ல இன்று உலக அரங்கில் இந்திய நாட்டை தலைநிமிரச் செய்த பெருமை இஸ்ரோ என்றால் இது மிகையல்ல. இதற்குத் தற்போதைய சான்று சந்திராயன்-1, சந்திராயன்-2, சந்திரயன்-3 மற்றும் ஆதித்யா-L1 ஆகியன ஆகும்.
மங்கள்யான், சந்திரயான் 1, சந்திரயான் 2, சந்திராயன்-3, ககன்யான், ஆதித்யா-L1 என அடுத்தடுத்து விண்கலன்கள் மூலம் விண்வெளியில் பிரம்மாண்ட ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது இஸ்ரோ.
நீங்கள் செய்ய வேண்டியது :
அப்படிப்பட்ட இஸ்ரோவில் சேர்ந்து சவால்கள் மிகுந்த விண்வெளித்துறையில் சாதிக்க வேண்டுமானால் இந்த விபரங்களை மாணவர்கள் மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு முதற்கட்டமாக 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதும் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பில் சேரும் போது இயற்பியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், அதில் நன்றாக படிக்க வேண்டும். பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். தொடர்ந்து 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற வேண்டும். பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால், இஸ்ரோவின் IIST கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதன் விரிவாக்கம் Indian Institute of Space Science and Technology ஆகும். இது இஸ்ரோவின் சொந்த கல்வி நிறுவனம் ஆகும். இன்று உலகிலேயே முதல்10 (டாப் 10) வான்வெளி ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களில் பட்டியலில் IIST உள்ளது.
IIST தவிர ...
IIST தவிர IIT, NIT போன்ற உயர்தர கல்வி நிறுவனங்களிலும் படிக்கலாம். இதில் சேருவதற்கு பிரத்யேகமாக JEE நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. எனவே, JEE தேர்வுக்கு தயாராகி, அதிக மதிப்பெண்கள் பெறுவதன் மூலம் IIT, NIT கல்வி நிறுவனங்களில் சேர முடியும். இந்த கல்வி நிறுவனங்களில் B.Tech in Physics, Aero Space Engineering, M.Sc Astro physics, Astronomy என பல்வேறு வான்வெளி ஆராய்ச்சி தொடர்பான துறையில் சேர வேண்டும். இந்தப் படிப்புகளை வெற்றிகரமாக முடித்த பிறகு சில நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.
இஸ்ரோவின் சார்பில் ICRB என்ற தேர்வாணையம் செயல்படுகிறது. இதன் விரிவாக்கம் ISRO Central Recruitment Board ஆகும். இஸ்ரோவில் விஞ்ஞானி உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கு இந்த தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் நடைபெறுகிறது. ICRB நடத்தும் தகுதி தேர்வில் 65 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றால், தகுதி சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் இஸ்ரோவில் உதவி ஆராய்ச்சியாளர், ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளில் சேர முடியும்.
அடுத்தக்கட்டமாக ஆராய்ச்சித் தொடர்பான பணிகளில் மேற்கொண்டு கவனம் செலுத்த முடியும்.
குறிப்பு:
நம் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் IIST-பதினாறு ஆண்டுகளைக் கடந்த பதினெழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த பதினோரு ஆண்டுகளில் IIST 1,300 பொறியாளர் மற்றும் விஞ்ஞானிகளை இஸ்ரோவிற்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

